Sunday, November 15, 2009

மதுவின் பிடியில்!!

மதுவின் பிடியில்!!!

மின்னஞ்சல்அச்சிடுகPDF

ஒழுக்கமும் வீரமும் நிறைந்த இளைஞன் ஒருவன் முக்கிய வேலையாகக் காட்டினூடே சென்றுகொண்டிருந்தான். அவனைப் பாதை மாற வைக்கவேண்டும், தவறு செய்யத் தூண்டவேண்டும் என்று விரும்பிய சாத்தான் காட்டில் அழகிய இளம்பெண் ஒருத்தி, ஒரு சிறு குழந்தை மற்றும் ஒரு புட்டி மதுவுடன் வழியில் காத்துக்கொண்டிருந்தது. அவனை வழிமறித்து, "நீ மேற்கொண்டு பயணம் செய்ய வேண்டுமானால், இந்தப் பெண்ணை பலாத்காரம் செய்யவேண்டும், அல்லது இந்தக் குழந்தையைக் கொல்ல வேண்டும். இந்த இரண்டும் செய்ய விரும்பவில்லை என்றால் குறைந்த பட்சம் இந்த மதுவையாவது அருந்த வேண்டும். இல்லையெனில், நான் உன்னை விடமாட்டேன்." என்று சொன்னது.



beer_invitationஇளைஞன் கொஞ்சம் யோசித்தான். அவன் சென்று கொண்டிருக்கும் பணியோ அவசரமானது, முக்கியமானது. எனவே இந்த மூன்றில் ஏதேனும் ஒன்றை அவன் செய்துதான் ஆகவேண்டும். ஒழுக்கம் நிறைந்தவன் ஆதலால், அவன் பெண்ணை பலாத்காரம் செய்வதை அவன் தேர்ந்தெடுக்க விரும்பவில்லை. ஒரு வீரனால் ஒன்றுமறியா ஒரு பச்சிளங்குழந்தையை எப்படிக் கொல்ல இயலும்? எனவே மதுவை அருந்திவிடுவதே கொடுக்கப்பட்ட மூன்றில் எளியது என்று அவனுக்குத் தோன்றியது. சாத்தானிடம் அவன் தன் முடிவைச் சொல்லிவிட்டு, மதுப்புட்டியை எடுத்து அருந்தினான். மது உள்ளே சென்றதும், புத்தி தடுமாறியது. போதையில் மோகவெறி ஏறவே அப்பெண்ணைப் பலாத்காரம் செய்தான். இடையில் குழந்தை அழுது, அவனைத் தொல்லை செய்தது. உடனே அவன் வாளால் அக்குழந்தையை வெட்டிக் கொன்றுவிட்டான். சாத்தான் தன் வேலை முடிந்த திருப்தியுடன் சென்றது.

மதுவின் தீமையை விளக்கக் கூறப்படும் கதை இது. மதுவின் பிடியில் சிக்கிய மனிதர்கள் தமது மனநலம், உடல் நலம் இரண்டையும் இழப்பதோடு, சமூகத்தில் தனக்குள்ள மதிப்பையும் இழக்கின்றனர்.

மதுவினால் ஏற்படும் பாதிப்புகள்:
மது அருந்துபவர்கள் சொல்லும் பொதுவான காரணங்கள், 'எனக்கு அலுவலில் பிரச்னை', 'வீட்டில் குழப்பம்', 'என் துயரத்தை மறக்கக் குடிக்கிறேன்', 'உடல் அலுப்பை மறக்கக் குடிக்கிறேன்' என்பன. ஆனால் உண்மையில் நமது மனம் அந்தப் போதையின் பாதையில் செல்ல விரும்புகிறது. அதற்கு இதுவெல்லாம் ஒரு நொண்டிச் சாக்கு. பார்க்கப்போனால், மதுவின் மயக்கத்தில் ஆழ்ந்திருக்கையில் நாம் மறந்திருக்கும் பிரச்னைகள் நாம் நனவுலகிற்கு வந்தவுடன் இன்னும் அதிகமாகத் தாக்கும். நம்மை மேலும் தனிமையாய் உணரச் செய்யும். அதிகமாக மனச் சோர்வையும் மன அழுத்தத்தையும் ஏற்படுத்தும். மது கொஞ்சம் கொஞ்சமாக நமது சிந்தனைத் திறனை, மூளையின் செயற்பாட்டை மழுங்கடிக்கும். உடலிலும் மனத்திலும் மதுவினால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன என்று தெரிந்துகொண்டால் நாம் அதன் பிடியில் இருந்து விலகிக் கொள்ளலாம். நமது நெருங்கிய உறவு மற்றும் நண்பர்கள் இதற்கு ஆட்பட்டிருந்தால் அவர்களுக்கும் எடுத்துரைத்து அவர்களை மீட்க முயலலாம்.

மதுவை அருந்தியவுடன் மது அருந்துபவர்களின் இரத்தத்தில் நேரடியாக ஆல்கஹால் கலந்துவிடுகிறது. மூளைக்கு ஆல்கஹால் கலந்த இரத்தம் செல்கையில் உடல் உறுப்புகளை இயக்கும் மூளை நரம்புகள் சரிவரச் செயல்படுவதில்லை. எனவே நடை தடுமாறுகிறது. நாக்குக் குழறுகிறது. கண்பார்வை விரிவடைவதால் பார்வை மசமசப்பாகிறது. உடல் இயக்கங்களை ஒருங்கிணைப்பதும், சிந்திப்பதும் கடினமாகின்றன.எனவே மறதி ஏற்படுகிறது.

தொடர்ந்து மது அருந்துகையில், மேலும் நிலைமை மேலும் மோசமாகிறது. இரத்தத்தில் கலந்திருக்கும் ஆல்கஹாலின் அளவு அதிகரிக்கிறது. அதிக அளவு ஆல்கஹாலை உடலால் உடனடியாக ஏற்றுச் சீரணித்துக்கொள்ள இயலுவதில்லை. இரத்தத்தில் ஆல்கஹாலின் அளவை Blood Alcohol Count (BAC) என்று குறிக்கின்றனர். இது 0.10 அளவு வரை இருக்கும்பொழுது பெரிய ஆபத்து எதுவும் நேரிடாது. ஆனால், தொடர்ந்து மது அருந்துபவர்கள் உடலில் இது அதிகரித்துக் கொண்டே இருக்கும். இரத்தத்தில் மதுவின் அளவு மிக அதிகரிக்கையில் கோமா, மூச்சடைப்பு இவை ஏற்படும் வாய்ப்புகள் மிக உண்டு.

தொடர்ந்து மது அருந்துபவர்கள் உடம்பில் ஆல்கஹாலுக்கு எதிரான தாங்கும் சக்தி (Tolerance) அதிகரிக்கிறது. அதாவது குறைந்த அளவு ஆல்கஹால் போதையை ஏற்படுத்துவது இல்லை. எனவே மேலும், மேலும் குடிக்கவேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டுவிடுகிறது. அதிக அளவு மது உடல் உறுப்புகளுக்கு சேதம் ஏற்படுத்துகிறது. அது மட்டுமல்ல, போதையின் பிடியில் சிக்கியிருப்பவர்கள் அதிக அளவில் விபத்துகளுக்கு உள்ளாகின்றனர். கீழே விழுதல், தீ விபத்து, நீரில் மூழ்கிவிடுதல், மோட்டார் வாகனங்களை ஓட்டும்பொழுதும், இயந்திரங்களை இயக்கும்பொழுதும் விபத்துக்குள்ளாகுதல் இவை எல்லாம் மது அருந்துபவர்களுக்கிடையேதான் அதிகம்.

உடலில் அதிகமாகும் ஆல்கஹாலின் அளவு நோய் எதிர்ப்புச் சக்தியைக் குறைத்துவிடும். சிறு சிறு உடல் உபாதைகளுக்கு எதிராகப் போராடும் சக்தியைக் கூட உடல் இழந்துவிடுகிறது. சளித்தொல்லை அதிகமாகிறது. உணவில் இருந்து சத்துக்களை உறிஞ்சி உடலுக்குத் தரவேண்டிய உறுப்புகள் மெல்ல மெல்லச் செயல் இழக்கின்றன. இதன் காரணமாக உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைப்பதில்லை. ஆனால், மதுவில் இருக்கும் கலோரிகள் உடனடியாக உடலில் கலந்துவிடுவதால், உடல் பருமன் நாளடைவில் மிகவும் அதிகரித்துவிடக் கூடும். உடலில் உள்ள நீர்ச்சத்தினை மது குறைக்கிறது. இதனால் தோல் சுருங்கியும் வறண்டும் போகத்தொடங்கும். அது மட்டுமின்றி, இரத்த நாளங்கள் சுருங்கவும், அவற்றில் வெடிப்புகள் உண்டாகவும் மது காரணமாகி விடுகிறது.

அதிக அளவு மது அருந்துவது, அல்லது தொடர்ந்து மது அருந்துவது, நீண்ட காலப் பாதிப்புகளை ஏற்படுத்தும். மூளையில் செல்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழியத்தொடங்கும். கல்லீரல் மற்றும் குடலில் புண் உண்டாகும். இதனால் செரிமானக் கோளாறுகள் மற்றும் வயிற்று வலி ஏற்படலாம். மஞ்சள் காமாலை நோயும் தாக்குவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். இரத்தக்கொதிப்பு அதிகரிக்கும். நரம்பு மண்டலப் பாதிப்புகள், சிறுநீரகக் கோளாறுகள் ஏற்படலாம். மாரடைப்பு, புற்றுநோய் இவற்றின் தாக்குதலுக்கும் ஆளாக நேரிடலாம்.

அது மட்டுமல்ல. குடிப்பவர்கள் தங்கள் நிதானத்தை இழந்துவிடுவதால் வீட்டில் சண்டை சச்சரவுகள் அதிகரிக்கின்றன. சமூகத்தில் கெட்ட பெயரும் உண்டாகிறது. மானம் மரியாதை இவை காற்றில் பறக்கின்றன. இயக்குநர் சிகரம் திரு. பாலசந்தரின் சிந்து பைரவி திரைப்படம் பார்த்திருக்கிறீர்களா? குடியின் தீமையை அதைப்பார்த்தவர்கள் எல்லாரும் அவசியம் உணர்ந்திருப்பார்கள். இத்தகைய பல கேடுகள் உண்டாக்கக்கூடிய 'குடி கெடுக்கும்' குடிப்பழக்கத்தைக் கைவிட வேண்டியது அவசியம். குடிப்பழக்கத்தை நிறுத்துவதற்கான வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகளுடன் மீண்டும் இப்பகுதியில் சந்திப்போம்.
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது

No comments:

Post a Comment