Sunday, November 15, 2009

“குடி”மகனே வா….எனும் புற்றுநோய்!?

“குடி குடியைக் கெடுக்கும்”, “குடிப்பழக்கம் உடல் நலத்துக்கு கேடு”, இப்படி என்னதான் சொன்னாலும் “மனம் விரும்புதே உன்னை….உன்னை” அப்படின்னு டாஸ்மாக்குக்கு போற ஆளுகளுக்கெல்லாம் ஒரு முக்கியமான ஆய்வைப் பத்தி கொஞ்சம் தெரியப்படுத்தலாமேன்னு இந்தப் பதிவை எழுதறேன்! அதாவது , குடிப்பழக்கத்துனால கல்லீரல் பாதிப்பு, நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் 10 மடங்கு அதிக வேகத்தில் வயது முதிர்ச்சி அடைதல் போன்ற பல பிரச்சனைகள் இருந்தாலும், இதுல மிக முக்கியமான பிரச்சனை என்னன்னா, குடிப்பழக்கத்துனால புற்றுநோய் வருகிற வாய்ப்பு அதிகம் அப்படிங்கறதுதான்!

அது எப்படிங்கறீங்களா? அதாவது, இதுவரைக்குமான ஆய்வுகள்ல குடிப்பழக்கத்துக்கும் புற்றுநோய்க்கும் நெருங்கிய தொடர்பு இருக்குன்னுதான் கண்டுபிடிக்க முடிஞ்சதே தவிர, அதற்கான அடிப்படைக் காரணத்தை/விளக்கத்தை கண்டுபிடிக்க முடியல! அதனால, இந்த “தொடர்பு “வெறும் செய்தியாகவேதான் மக்கள் மத்தியல இருந்ததே தவிர, ஒரு எச்சரிக்கையாக யாரும் அதை பாவிக்கவில்லை! ஆனால், இனிமே அப்படி நாம அஜாக்கிரதையா இருந்தோம்னா ரொம்ப சிக்கலாயிடும் வாழ்க்கை. ஏன்னு கேக்கறீங்களா? ஆமாங்க, புற்று நோய்க்கும் குடிப்பழக்கத்துக்கும் உள்ள தொடர்புக்கான அடிப்படைக் காரணங்கள கண்டுபிடிச்சிருக்காங்க அமெரிக்காவைச் சேர்ந்த ரஷ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள்! மேலும் புற்று நோய்க்கும் குடிப்பழக்கத்துக்குமான தொடர்பை உறுதி செஞ்சு, குடிப்பழக்கம் இருந்தால் புற்றுநோய் கண்டிப்பா வரும்னு கிட்டத்தட்ட உறுதியா சொல்றாங்க!

இந்தத் தொடர்பைப் பத்தி தெளிவாப் புரிஞ்சிக்கனும்னா கொஞ்சம் புற்றுநோய் பற்றிய அடிப்படையைப் முதல்ல புரிஞ்சிக்கனும். அதனால, என்னறிவுக்கு எட்டியவரை புற்றுநோய் பற்றிய சில அறிவியல் (உடலியல்) கோட்பாடுகள தமிழ்ல விளக்க முயற்ச்சிக்கிறேன். அதுல உங்களுக்கு ஏதாவது சந்தேகமிருந்தா என்ன நீங்க தாராளமா கேள்வி கேட்கலாம்!

புற்றுநோய் அப்படின்னா என்ன?

“புற்றுநோய் என்பது உடலின் பெரும்பாலான திசுக்களில் ஏற்படும் ஒரு கட்டுப்பாடற்ற அல்லது அசுற வளர்ச்சி. அந்த அசுற வளர்ச்சியானது, தோன்றிய திசுக்களில் மட்டுமல்லாது, உடலின் பிற பாகங்களுக்கும் ரத்தத்தின் மூலம் பரவக்கூடிய குணாதிசியம் கொண்டது.” சரி, இப்போ புற்று நோய்க்கான ஒரு உதாரணத்தப் பார்ப்போம். அதாவது, திடீரென்று வயிற்றில் ஒரு கட்டி உண்டாகிரதென்று வைத்துக்கொள்வோம். அதை நாம் மாத்திரை மூலமாகவோ, அறுவைச்சிகிச்சை மூலமாகவோ அகற்றிய பின் சில மாதங்களில் அது மீண்டும் வளர்ந்தால் அது புற்றுநோய் (ட்யூமர்/கேன்சர்). இல்லையென்றால் அது வெறும் கட்டி. அதுமட்டுமல்லாமல், புற்று நோயில் இருவகை உண்டு. ஒன்று, தோன்றிய இடத்தில் மட்டுமே தொடர்ந்து வளரும் தன்மை கொண்ட புற்றுநோய். இதை ஆங்கிலத்தில், “பினைன் ட்யூமர்” என்கின்றனர். இரண்டாவது, தோன்றிய இடத்தில் இருந்து நாளடைவில் ரத்தம் மூலம் பரவி, உடலின் பிற பாகங்களையும் பாதிக்கும் தன்மை கொண்டது. இதை “மேலிக்னன்ட் ட்யூமர்” என்கின்றனர்.விரிவான விளக்கத்திற்கு இந்தக் காணொளியைப் பாருங்கள்…..


குடிப்பழக்கத்தினால் புற்று நோய் ஏற்படுமா?

சரி, இப்போ உங்களுக்கு புற்று நோய் பற்றிய அடிப்படை தெரியும். அதனால, நாம மீண்டும் பதிவுக்கு வருவோம். இப்போ நமக்கு தெரிய வேண்டியது என்னன்னா, மது அருந்தினால் (அதாங்க தண்ணி அடிச்சா!) புற்று நோய் வருமா? அப்படி வரும்னா, அதுக்கு என்ன காரணம்? புற்றுநோய் ஒரு கொடிய நோயாக உருவாவதற்கான பல காரணங்களில் ஒன்று, தோன்றிய இடத்திலிருந்து உடலின் பிற பாகங்களுக்கு பரவும் தன்மையான “மெட்டாஸ்டேசிஸ்” எனும் நிகழ்வு. இந்த மெட்டாஸ்டேசிஸ் நிகழ ஒரு அடிப்படைக்காரணம், நம் உடலில் உள்ள எபிதீலியல் செல் (தோள்களில் இருப்பவை) என்னும் ஒரு வகையான செல். இத்தகைய செல்கள் சேர்ந்த ஒரு திசுவானது படுக்கை விரிப்பு போன்ற ஒரு வடிவத்தில் , பல அடுக்குகளைக் கொண்டதாக இருக்கும்.

இத்தகைய எபிதீலியெல் திசுக்கள், சில சமயங்களில் தனித்தனி செல்களாக உடைந்து பின், “மீசென்கைமல் செல்” எனும் வேறொரு செல்லாக மாறுகின்றன. இந்த மாற்றமானது ஆங்கிலத்தில் “EMT Transition” அதாவது, Epithelial-Mesenchymal Transition எனப்படுகிறது. அது சரி, இந்த மாற்றத்திற்க்கும் புற்று நோய்க்கும் என்ன தொடர்பு அப்படின்னு கேட்டீங்கன்னா, இந்த எபிதீலியல் திசுக்களில்தான் பெரும்பாலான புற்றுநோய்கள் உருவாகின்றன. அப்படி உருவாகும் புற்றுநோய்கள் பரவ, இவ்வைகையான மாற்றமே (EMT transition) அடிப்படையாகிறது என்பது புற்றுநோய் ஆய்வில் சில வருடங்களுக்கு முன் கண்டறியப்பட்டது! அதாவது, புற்றுநோய் திசுக்களில் ஏற்படும் மாற்றமான EMT-யால் தனித்தனியாக உடையும் புற்றுநோய் செல்கள், ரத்த நாளங்கள் வழியாக உடலின் பிற பாகங்களுக்கு சென்று அந்தந்த பாகங்களுள் புற்று நோயத் தோற்றுவிக்கின்றன என்கின்றனர் விஞ்ஞானிகள்!

cfig1

EMT transition

இந்த EMT transition-னுக்கு யார் காரணம்னு இப்போ கண்டுபிடிச்சிருக்காங்க விஞ்ஞானிகள்.அது யாருன்னு தெரியுமா உங்களுக்கு? வேற யாருமில்லீங்க, நம்ம “குடி”மகன்களின் நண்பன் மதுதாங்க (அதாங்க சாராயம்!). மேலும், புற்று நோய் பரவ ஒரு முக்கியமான தேவையான “EMT transition” என்னும் உடலியல் மாற்றத்தை தூண்டுவதே சாராயம்தான் என்னும் அதிர்ச்சிகரமான உண்மையை கண்டுபிடிச்சிருக்காங்க. அதனால குடிப்பழக்கத்துனால புற்று நோய் வரும் வாய்ப்பு இருக்குன்னு மட்டுமே இதுவரைக்கும் சொல்லிக்கிட்டிருந்த விஞ்ஞானிகள், இப்போ குடிப்பழக்கத்துனால எப்படி அல்லது மதுவால எப்படி புற்று நோய் உருவாகிறது என்னும் அடிப்படை உண்மையை செயல்விளக்கத்தோட திட்டவட்டமா சொல்றாங்க! இந்த ஆய்வைப் பத்தி மேல படிக்கனும்னா இங்க கிளிக்குங்கோ

அப்படின்னா குடிச்சா கண்டிப்பா புற்று நோய் வரும்னு கிட்டத்தட்ட உறுதியா சொல்றாங்க விஞ்ஞானிகள்! இதுல இருந்து என்ன தெரியுது அப்படின்னா, “ஒரு கோப்பையிலே என் “குடி”யிருப்பு….ஒரு கோல மயில் என் துணையிருப்பு”அப்படின்னு, இப்போ பாடிக்கிட்டு இருக்கிற “குடி” மகன்களாகிய நம்மல்ல பல பேர் (எல்லாருமேதான்!) ” குளிச்சா குத்தாளம்….கும்பிட்டா பரமசிவம்! குடிச்சா “நீர்மோரு”….புடிச்சா நீதாண்டி!” அப்படின்னு இனிமே பாட்ட மாத்திக்கலைன்னா வாழ்க்கை “எங்கே செல்லும் இந்தப் பாதை….யாரோ யாரோ அறிவார்”அப்படின்னு ஆயிடும் புரியுதுங்களா? புரிஞ்சா சரி! அப்ப நான் இப்போதைக்கு அப்பீட்டாயிக்கிறேனுங்கோ!

Rate This

No comments:

Post a Comment