Sunday, November 15, 2009

கொள்ளி - கொஞ்சம் தள்ளி நில்லு




இயற்கையாய் வரும் மரணம் வரம். யாரும் எதிர்பாராத கணத்தில் இயற்கைச் சீற்றத்தால் வரும் மரணம் தடுக்க, தவிர்க்க இயலாத ஒன்று. விபத்தில் வரும் மரணத்தில் கூட இன்னொருவனின் தவறு இருக்கிறது.

அன்றெல்லாம் எங்கேயோ, புற்று நோயால் இறந்து போய் விட்டாராம் என்பது ஒரு ஆச்சரியமான செய்தி. இன்று... நண்பன் இறந்தான், நண்பனின் நண்பன் இறந்தான், ஒன்று விட்ட சித்தப்பாவின் நெருங்கிய உறவில் இறந்தார் என்பது வாடிக்கை...

தனக்குத் தானே கொள்ளி வைத்துக் கொண்டு செத்துப் போவதில் என்னதான் சுகமோ?

சராசரியாக நூறில் ஒருவருக்கு புற்று நோய் தாக்கி வருகிறது என்பது, அதிர்ச்சிகரமான தகவல்.

கடந்த ஐந்து வருடத்தில் இரண்டு நண்பர்களை புற்று நோய்க்குப் பலி கொடுத்திருக்கிறேன். ஒருவருக்கு சிறுநீரகத்தில் புற்று, இன்னொருவருக்கு தொண்டையில் புற்று (தொடர்ச்சியாக இவர் பான்பராக்-ஐ உட்கொண்டதுதான் காரணம்). இருவருக்குமே வயது முப்பதுகளின் சமீபத்தில். ஒருவருக்கு இரண்டு வயதில் பெண் குழந்தை, இன்னொருவருக்கு திருமணமாகி ஆறு மாதம்.

இருவருமே, புற்று நோய் என்று தெரிந்த பின் தங்கள் மரணம் வரை தவித்த தவிப்பும், மரணத்தை தவிர்க்க போராடிய போராட்டமும், தவிர்க்க முடியாது என்றான பின் தள்ளிப்போட பதை பதைத்ததும், ஹீமோ தெரபி சிகிச்சை எடுத்து உடல் உபாதையில் பரிதவித்ததும் என்றும் மறக்கவே முடியாத துன்பம்.

ஒரு கட்டத்திற்கு மேல், வலியின் கொடுமை தாளாமல், இந்த விநாடியே மரணம் வந்து விடக்கூடாதா என்று கண்ணீரோடு கதறியதை அருகிலிருந்து பார்த்திருக்கிறேன்.

“சிகரெட் பிடிக்காதவனும், பாக்கு போடாதவனும் செத்துப்போகிறான் தானே” என்ற சப்பை வாதத்திற்கு என்னிடம் பதிலில்லை. ஆனால் புகை, பாக்கு பழக்கம் உள்ளவர்களுக்கு நோய் தாக்கும் வாய்ப்பு பல்லாயிரம் மடங்கு அதிகம்.

வாழ்க்கை என்பது ஒருமுறை கிடைத்திருக்கும் அதிசயம். மருத்துவமனைகள் எல்லாம் நிரம்பி வழிந்து கொண்டிருக்கின்றன. அதில் பிதுங்கிக் கொண்டிருக்கும் நோயாளிகளின் வலி சாதாரணமானது இல்லை. நலமாக இருக்கும் வரை அந்த வலி உணரப்படுவதில்லை. ஒருமுறை கொடிய நோய் தாக்கினால், மீள்வது மிகக் கடினம்.


நீங்கள் புகை பிடிப்பவரானால் அடுத்து பிடிக்க எடுக்கும் முதல் சிகரெட்டை உடைத்து எறியுங்கள். உங்கள் நண்பர் புகை பிடிப்பவரானால், அவர் அடுத்து பிடிக்க எடுக்கும் சிகரெட்டை பிடுங்கி உடைத்து எறியுங்கள்...


No comments:

Post a Comment