திருவனந்தபுரம்: கடவுளின் சொந்த நாடு என புகழப்படும் கேரளா, ஆல்கஹாலில் மூழ்கி வருகிறதாம். அபாயகரமான அளவுக்கு கேரளாவில் குடிப்பழக்கம் அதிகரித்து வருவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
நாட்டிலேயே அதிக அளவில் கல்வியறிவு கொண்ட மாநிலம் கேரளா. இயற்கை எழில் கொஞ்சும் கேரளாவில், எழுத்தறிவு, படிப்பறிவு, இலக்கியம், கலை என பல விஷயங்களும் சிறப்பாக உள்ளன. கூடவே மதுப் பழக்கமும் தலை விரித்தாடுகிறது.
கேரள மக்களை குடிப்பழக்கம் மிக மிக மோசமான நிலைக்குக் கொண்டு செல்வதாக சமீபத்தில் நடத்தப்பட்ட பொருளாதார ஆய்வு தெரிவிக்கிறது. மாநில சட்டசபையில் இந்த ஆய்வறிக்கை பார்வைக்கு வைக்கப்பட்டது.
உலகிலேயே அதிக அளவில் குடிப்பழக்கம் கொண்டவர்கள் நிறைந்த மாநிலமாக கேரளா உருவெடுத்துள்ளதாக அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் பிற பகுதிகளில் தனி நபர் ஒருவரின் சராசரி மது அருந்தும் பழக்கம் 4 லிட்டராக உள்ளது. ஆனால் இது கேரளாவில் 8.3 லிட்டராக உள்ளது.
கேரள மாநில மதுக் கழக கடைகளின் முன்பு எப்போதும் ஜே ஜே என கூட்டம் நிரம்பிக் காணப்படுகிறது. நீண்ட வரிசையில் நின்று மது அருந்தும் பழக்கம் மலையாளிகளிடம் அதிக அளவில் உள்ளதாக அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில் தெரிய வந்துள்ள இன்னொரு அதிர்ச்சித் தகவல் என்னவென்றால், பெண்களும் கூட கணிசமான அளவில் மது அருந்த ஆரம்பித்துள்ளனர் என்பதுதான். மேலும் இளைஞர்கள் மத்தியில் குடிப் பழக்கம் வேகமாக அதிகரித்து வருகிறதாம்.
புகை பிடிக்கும் பழக்கத்தை விட்டு விட்டு குடிப்பழக்கத்திற்கு ஏராளமான இளைஞர்கள் மாறி வருகிறார்களாம்.
மது விற்பனையிலும், குடிப் பழக்கத்திலும் பஞ்சாபை 2வது இடத்திற்குத் தள்ளி விட்டு முதலிடத்தைப் பிடித்துள்ளது கேரளா.
கேரள மாநில மது விற்பனைக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் சங்கர் ரெட்டி இதுகுறித்துக் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மது மற்றும் பீர் விற்பனை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த 6 மாதங்களில் மட்டும் 31 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது.
நடப்பு நிதியாண்டில் மது விற்பனை மூலம் ரூ. 1000 கோடி அளவுக்கு வருவாய் கிடைக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால் கடந்த ஏப்ரல் முதல் அக்டோபர் மாதம் வரையிலான விற்பனையே ரூ. 2,642.18 கோடியாக உயர்ந்து விட்டது. கடந்த நிதியாண்டில் மொத்த விற்பனையே ரூ. 2,019 கோடியாகத்தான் இருந்தது. எனவே நடப்பு நிதியாண்டில் மது விற்பனை அளவு ரூ. 4,700 கோடியைத் தாண்டும் என எதிர்பார்க்கிறோம்.
பீர் மட்டுமல்லாது அனைத்து மது வகைகளையும் கேரள ஆண்களும், பெண்களும் பெருமளவில் விரும்புகின்றனர். செப்டம்பர் மாதம் வரை 33.14 லட்சம் கேஸ் பீர்கள் விற்பனையாகியுள்ளன. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 26.83 லட்சம் கேஸ் ஆக இருந்தது.
இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மது வகைகளின் விற்பனை இதே காலகட்டத்தில் 87.40 லட்சம் கேஸ்களாக இருந்தன. இது கடந்த ஆண்டு 69.75 லட்சம் கேஸ்களாக இருந்தன.
1987-88ம் ஆண்டில் வெளிநாட்டு மது வகைகளின் விற்பனை வருவாய் வெறும் ரூ. 81.42 கோடியாக இருந்தது. ஆனால் 2007-08ம் ஆண்டில் இதன் அளவு ரூ. 3,669.49 கோடியாக உயர்ந்தது. நடப்பு நிதியாண்டில் இது ரூ. 4,700 கோடியாக உயரும் எனத் தெரிகிறது.
மது அருந்துவோரின் பொது விருப்ப பானமாக ரம் உள்ளது. மொத்த விற்பனையில் 62 சதவீதம் ரம் தான் விற்பனையாகிறது. பிராந்தி விற்பனையின் அளவு 32 சதவீதமாகும்.
ஓனம் மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகைகளின்போதுதான் விற்பனை பெருமளவில் அதிகரிக்கிறது.
'மப்பில்' எர்ணாகுளம் நம்பர் ஒன்!
மது அருந்துவதில் கேரளாவிலேயே எர்ணாகுளம் மாவட்டம்தான் நம்பர் ஒன் இடத்தில் உள்ளது.
இதைத் தொடர்ந்து திருவனந்தபுரம், கொல்லம், திருச்சூர் ஆகியவை உள்ளன. இடுக்கிதான் குறைந்த அளவில் மது அருந்துவோரைக் கொண்ட மாவட்டமாகும்.
கேரள மது விற்பனைக் கழகம் முதலில் 300 கடைகளைத் திறந்தது. தற்போது இது 330 கடைகளாக உயர்ந்துள்ளது. மேலும் நிறைய கடைகளைத் திறக்க வேண்டும் என மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்தவண்ணம் உள்ளது என்றார் அவர்.
மது விற்பனை மூலம் கேரள மது விற்பனைக் கழகம் மூலம் மட்டும் கேரள அரசுக்கு ரூ. 2,914.28 கோடி வருவாய் கிடைத்துள்ளதாம். இதுதவிர பார் உரிமம் மூலம் மேலும் பல கோடி ரூபாய் கொட்டுகிறதாம்.
கேரளாவில் மது விற்பனையும், குடிப் பழக்கமும் படு வேகமாக அதிகரித்து வருவதால் மதுவுக்கு எதிரான பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளோர் பெரும் கவலையில் மூழ்கியுள்ளனர். ஆனால் கேரளாவோ வேகமாக ஆல்கஹாலில் மூழ்கி வருகிது.
Sunday, November 15, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment