குடிகாரர்களுக்கு கிடைக்குமா மரியாதை?
நண்பர்கள் சிலருடன் சேர்ந்து உற்சாகமாகத் துவங்கிய குடிப்பழக்கம். அதுவே அன்றாட வழக்கமாகிப் போய் விட இன்றும் பலர் அதை விட முடியாமல் விடாமல் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். மதுவைக் குடித்துப் பழகிவிட்டவர்கள் தங்கள் தொடர் குடிப்பழக்கத்திற்கு ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லிக் கொள்கிறார்கள். அவர்கள் பொதுவாக எந்த விஷயத்திலும் அக்கறை கொள்வதில்லை. தங்கள் பணியைக் கூட ஏனோதானோவென்று கடனுக்குத்தான் செய்கிறார்கள்.
மது குடிப்பவர்களின் எண்ணங்கள் அவர்களது ஒரே தேவையான மதுவை மட்டுமே சுற்றிக் கொண்டிருப்பதால் அவர்களிடம் குடும்பத்தைப் பற்றிய எண்ணங்களே இருப்பதில்லை. வீட்டில் இருக்கும் மனைவி மற்றும் குழந்தைகளின் தேவைகள் தெரிந்தாலும் அதை நிறைவேற்ற அவர்கள் முயற்சிப்பதில்லை. இதனால் வீட்டில் தினமும் சண்டையும் சச்சரவுகளும் தானாகவே வருகிறது. இந்தக் குடிப்பழக்கம் அவர்கள் எவ்வளவுதான் நல்ல குணமுடையவர்களாக இருந்தாலும் அவர்களை கெட்டவர்களாக்கி விடுகிறது. அவர்களின் பேச்சுக்கு எங்கும் மதிப்பே இருப்பதில்லை. அவர்களின் வீட்டிலும் கூட மனைவியிடமோ, பிள்ளைகளிடமோ மரியாதை என்பது இவர்களுக்கு பூஜ்ஜியம் தான்.
மதுப்பழக்கம் உடைய மனிதனின் பல செயல்பாடுகளை இந்த மது முடக்கி விடுகிறது. மது அருந்துவதால் தனக்கு அதிகமான பலம் கிடைக்கிறது என்று சொல்லும் சிலரும் இருக்கிறார்கள். அந்த மது இல்லாமல் அவர்களால் சுயமாக செயல்பட முடியாத அளவிற்கு அந்த மது அவர்களை பலவீனமாக்கி விடுகிறது. இந்த மதுவிற்காக தங்களுடைய உடமைகள் மட்டுமில்லாது உரிமைகளையும் பலர் இழந்திருக்கிறார்கள். மொத்தத்தில் மது மனிதனை மனிதனாக இருக்க விடுவதில்லை.
மது தோன்றியது குறித்து ஒரு கதை சொல்லப்படுவதுண்டு.
உலகில் முதன் முதலில் நோவா என்பவர் திராட்சைத் தோட்டம் ஒன்றை அமைத்தார்.
அவர் அந்த தோட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு கொடிய தேவதையான சமீல் வந்தார்.
அவர் நோவாவைப் பார்த்து, " இங்கே என்ன செய்கிறாய்?" என்று கேட்டார்.
"மனிதர்களின் உள்ளங்களைக் குதூகலிக்கச் செய்யும் திராட்சைத் தோட்டம் அமைக்கிறேன்" என்றார் நோவா.
"அப்படியா! நானும் இந்தத் தோட்டத்தை அமைக்க உதவுகிறேன். நானும் நீயும் இந்தத் தோட்டத்தைப் ப்ங்கிட்டுக் கொள்வோம்" என்றார் சமீல்.
இதற்கு நோவாவும் ஒப்புக் கொண்டார்.
முதலில் சமீல் ஒரு ஆட்டைக் கொன்றார். அதைத் திராட்சைக் கொடியின் வேர்ப்பகுதியில் புதத்து வைத்தார். அடுத்ததாகச் சிங்கம் ஒன்றைக் கொன்றார். அதையும் அப்படியே புதைத்தார். அதன் பிறகு பன்றி ஒன்றையும் சில நாட்கள் கழித்து ஒரு குரங்கையும் புதைத்தார்.
அவற்றின் ரத்தம் திராட்சைக் கொடியின் வேர்ப்பகுதியால் உறிஞ்சப்பட்டு திராட்சைப் பழங்களில் சேர்ந்தது. திராட்சைப் பழச்சாறுகளில் இருந்து மது உருவாகும் போது கொன்று புதைக்கப்பட்ட மிருகங்களின் ரத்தம் மட்டும் முழுமையாக அதன் குணங்களுடன் சேர்ந்தது.
இதனால்தான் மதுவைக் குடித்தவுடன் ஒருவன் ஆட்டைப் போல் அஞ்சுகிறான். மேலும் குடித்தவுடன் தன்னைச் சிங்கம் போல் வலிமையாக நினைத்துக் கொள்கிறான். மிகுதியாகக் குடித்த பிறகு பன்றியைப் போல் மண்ணில் விழுந்து புரளுகிறான். மிக அதிகமாகக் குடித்த பிறகு குரங்கு போலாகி விடுகிறான். முட்டாளைப் போலாகி விடுகிறான். முட்டாளைப் போல் உளறுகிறான். அவன் பேசுவது அவனுக்கேப் புரிவது இல்லை.
இந்தக் கதையில் சொல்லப்படுவது போல் மது குடிப்பவர்கள் மிருகக் குணத்துக்கு மாறி விடுகிறார்கள். இதனால் குடிகாரன் என்கிற கெட்ட பெயருடன் அவனது செயல்பாடுகள் மட்டுமில்லாது அவனும் சேர்ந்தே புறக்கணிக்கப்படுகிறார்கள். இந்தக் குடிப்பழக்கத்தில் இருந்து விடுபடுவது எப்படி? அவர்களும் நல்ல பெயர் வாங்குவது எப்படி? எல்லாம் அவர்கள் கையில்தான் இருக்கிறது.
முதலில் இந்தக் குடிப்பழக்கத்தை விட்டுவிட வேண்டும். நாமும் மற்றவர்களைப் போல் நல்ல நிலைக்கு வரவேண்டும் என்கிற எண்ணத்தை ஆழமாக மனதில் பதிவு செய்து விட வேண்டும்.
குடிப்பழக்கத்திற்கு உடந்தையாக இருக்கும் நட்புகளைத் தவிர்க்கத் துவங்க வேண்டும்.
பணி நேரம் முடிந்தவுடன் வேகமாக வீட்டுக்குச் செல்லும் பழக்கத்தை வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.
வீட்டில் இருப்பவர்ளுடன் மகிழ்ச்சியாக இருக்கவும் அவர்களை வெளியிடங்களுக்கு அழைத்துச் சென்று உற்சாகப்படுத்தவும் முயற்சிக்க வேண்டும்.
விழாக்களுக்குச் செல்லும் பொழுது முதல் நாள் இரவே செல்வதைத் தவிர்த்து விட வேண்டும். விழாவிற்கு குறிப்பிட்ட நேரத்திற்குச் செல்ல வேண்டும். நெருங்கிய உறவினர் அல்லது நண்பர்கள் குடும்ப விழாவாக இருந்தால் குடும்பத்தினரையும் அழைத்துச் செல்ல வேண்டும். இதே போல் விழா முடிவடைந்தவுடன் கடைசி வரை அங்கிருக்காமல் திரும்பி விட வேண்டும்.
நல்ல நூல்களை வாங்கிப் படிக்க வேண்டும். அந்த நூலில் இருக்கும் நல்ல கருத்துக்களை வீட்டிலிருப்பவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். நல்ல சிந்தனையுடன் இருக்க வேண்டும்.
குடிப்பழக்கமிருந்த போது நமக்கு கிடைத்த கெட்ட பெயர்களில் இருந்து விடுபட்டு விட்டோம். இப்படியே நமக்குள்ள நல்ல பெயரைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள இனி எந்தக் காரணத்தை முன்னிட்டும் மீண்டும் குடிப்பதில்லை என்கிற உறுதியை மனதிற்குள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
-அப்புறம் பாருங்கள், உங்களுக்கு உங்கள் குடும்பத்தில் மட்டுமில்லை... ஊருக்குள்ளும் நல்ல பெயர்தான்.
No comments:
Post a Comment